Friday 3 April 2020


தமிழ்நாட்டுல கள்ளுக்குக்கடை தொறந்திருந்த காலம். அங்கங்க தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து கள்ளு எறக்கிவித்துக்கிட்டு இருந்தாக. அதுல கள்ளுக்கடை கருப்பையா ரொம்பப்பிரபலம் கிட்டத்தட்ட நூத்துக்குமேப்பட்ட தோப்புகளை குத்தகைக்கு எடுத்து ஆளுபோட்டு கள்ளு எறக்கி சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தாரு
தென்ன மரமோ பனமரமோ பாளைய வெட்டிவிட்டு கள்ளுக்கலயத்தை கட்டி விட்டா கள்ளு அதுல சேந்துடும் அதுல
எல்லா ஜீவராசிகளும் வுழுந்து கெடக்கும்
எடுத்து வடிகட்டிட்டு போதை அதிகமாக்க
செலவிசயங்களைச்சேத்து அனுப்புவாரு
பணம் எக்கச்சக்கமாப்பொழங்குச்சு. கைல பத்துவெரல்லயும் மோதரம் போட்டுருப்பாரு கழுத்துல பத்துப்பவனுக்கு புலிநகம் வைச்ச சங்கிலி மல்லுவேட்டி மைனர் ஜிப்பா புல்லட் ஆளும் ஆறடி ஒசரத்துக்கு எமனே எந்திரிச்சி வந்தமாதிரி இருப்பாரு. தோப்புக்கெல்லாம் நேரடியாபோவாரு கள்ளுக்கலயத்தை எறக்கி சேக்கவேண்டியதச்சேத்து
கடைகளுக்கு அனுப்பிடுவாரு காசுகுமியும்
காசு சேந்தாலே கண்ட பழக்கமெல்லாம் வந்துடும்தானே..எல்லாப்பழக்கமும் வந்துடுச்சு. கூத்தியாஊரு ஊருக்கு செட்டப்புன்னு மைனர் வாழ்க்க வாழ்ந்தாரு
அவருக்கு ரெண்டுமகனுக ஒரு மகளும்
இருந்தாக. மக ரொம்பச்செல்லம் பேரும் செல்லம்மாதான் கடைக்குட்டி அதுனால அவமேல பாசம் அதிகம். பட்டுப்பாவாடை கழுத்தெல்லாம் சங்கிலி ஜிமிக்கின்னு எல்லாம் வாங்கிக்குத்து செல்லமா வளத்தாரு
அவ என்னகேட்டாலும் வாங்கிக்குடுப்பாரு
காலையில கெளம்பும்போது மக அவ கைல சாவி எடுத்துக்குடுத்துஅனுப்புவா. ராசிக்காரமக அவ பொறந்தப்பப்புறம்தான்
லச்சுமி வீட்டுக்கு வந்துச்சும்பாரு அதுனால
அந்த வீட்டுல எக்கச்சக்க கவனிப்பு மகளுக்கு,
அவளுக்கு 12 வயசாச்சு வயசுக்குவார நேரம் வயசுக்கு வந்தவன்ன ஊரெல்லாம் கூட்டி பெருசா சடங்கு செய்ய திட்டம் போட்டிருந்தாரு அவளும் நல்லா வளந்துட்டா.
அவளோட வயசுஒத்த புள்ளைகள்லாம் ஒவொன்னா வயசுக்கு வர ஆரம்பிச்சாக அவுகளோட சடங்கெல்லாம் போயி பாப்பா
நாளைக்கி நமக்கும் இதுமாதிரி நல்லா அப்பா செய்வாருன்னு நெனப்பு வரும்
வயசு 15 ஆச்சு ஒண்ணும் நடக்கல
செலபுள்ளக லேட்டாத்தான் ஆகும் அவுகளோட அத்தமாரெல்லாம் கூட
15 , 16 லதான் பெரியமனுசி ஆனாகன்னு
கருப்பையா சமாதானப்படுத்திக்கிட்டாரு மனச .
பாக்குறவுகளும் கொஞ்ச கொஞ்சமாக்கேக்க ஆரம்பிச்சாக என்னா இன்னும் பொண்ணு மேசராகலையான்னு
இவருக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு
டாக்குட்டரு கிட்ட கூட்டிப்போயி காமிச்சாரு அவங்க சொன்னாக இதெல்லாம் தானா நடக்குறது முன்ன பின்னதான் ஆகும்ன்னு
வயசு 19 ஆகிப்போச்சு என்னமோ கோளாறுன்னு தெரியுது ஒருத்தரு சொன்னாரு சாமிகுத்தம் எதுனாச்சும் இருக்குமுங்க எதுக்கும் ஒரு பூசையப்போட்டுருங்கன்னாரு குலதெயவக்கோயில்ல பூசையும் போட்டாரு. அப்ப சாமியாடிக்கு அருள் வந்து அருள் வாக்குக்குடுக்கையில செல்லம்மாசாமியாடி கால்ல வுழுந்துகதறுனா
என்னமட்டும் ஏன் இப்புடிவைச்சிருக்க நான் என்னபாவம் செஞ்சேன் எனக்கு ஏனிந்த தண்டணைன்னு
சாமியாடி யும்காப்பாத்திக்கிறேன்னு ஒத்த வார்த்தையிலசொல்லிட்டு மலையேறிட்டாரு
ஒண்ணும் நடக்கல கருப்பையா சோகமாயிட்டாரு என்ன பண்ணுறதுன்னு தெரியல
அப்ப ஒரு கெளவி சொல்லிச்சி
எல்லா மரமமும் பூக்குறது காய்காச்சி பழுத்து வெதை உருவாகி வெதமூலமா
சந்ததி பெருகத்தான் நீ பாளை தள்ளுனவன்ன வெட்டிக்கள்ளுக்கலையம்
கட்டி அதைத்தடுத்துப்புட்ட
மனுசன வெட்டினாத்தான் பாவம்னு இல்ல
மரத்தைக்காயடிச்சாலும் கொடும் பாவம்தான் அதுதான் ஒன்னோட
மகளைப்பாதிச்சிடுச்சுஆயிரத்திஒரு மரம் நடுறேன்னு வேண்டிக்க சொன்னது மாதிரி வையி சரியாயிடும் ன்னு சொல்லிச்சி
கருப்பையாவுக்கு அது கேணத்தனமாத் தோணிச்சி ஆனா அவரோட மகனுகளுக்கும் வாரிசில்லாமப்போச்சி
ஒருநா செல்லமாவ யாரோ கிண்டல் பண்ணிருக்காக தகாத வார்த்தை சொல்லி வீட்டுல வந்து கதவச்சாத்திட்டு குமுறிகுமுறி அழுதா ஆராலும் அவளச் சமாதானப்படுத்த முடியல
மறுநா காலையில பொணமாத்தொங்குனா
கருப்பையா கதறி அழுதாரு.
நான் பண்ண பாவம் மகளைப்
பாதிச்சிருச்சேன்னு அன்னிக்கி தொழில நிறுத்துனாரு
இருந்தகாசுக்கு மரக்கண்ணா வாங்கி ஊருபூரம் நட்டாரு. காலயில கெளம்பிடுவாரு ஒரு கொடம் கொஞ்ச மரக்கண்ணுகளோட ஒவ்வொரு கண்ணுக்கும் தண்ணி ஊத்தும்போது
மகநெனப்பு வரும் ஊத்துற தண்ணியோட அவர்கண்ணீரும் இருக்கும் முடியாத வயசுலயும் அவரு செஞ்ச்சிக்கிட்டு இருந்தாரு கள்ளுக்கடைகருப்பையாவ இப்பெல்லாம் மரக்கண்ணு கருப்பையான்னுதான் கூப்புடுறாக....
காலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைச்சிருக்குன்னு அந்தக்கெளவி சொல்லிச்சு.........
கவிச்சிகரம் .முத்துவிஜயன்


No comments:

Post a Comment