Friday 3 April 2020


மானுட நீட்சி
அவனுக்குக்கலியாணமே கொஞ்சம் தள்ளிப்போயித்தான் நடந்துச்சு. ரெண்டுதம்பிகளுக்கு முடிஞ்ச பின்னாடிதான் கலியாணப்பேச்சே எடுத்தாக. என்னா விசயமுன்னா அவன் ஒரு மொடாக்குடியன். எப்போப்பாத்தாலும் குடிச்சிட்டே கெடப்பான் , கஸ்ட்டப்பட்டு வாங்குன வேலைக்கிக்கூட ஒழுங்கா போகமாட்டான். பாக்குறவுகக் கிட்டயெல்லாம் எவன்ட்டயாவது பொய்யச்சொல்லி காசவாங்கி குடிச்சிடுவான்

ஆனாலும் என்னத்தப்பண்ணுறது வயசாயிக்கிட்டே போகுது கலியாணத்தப் பண்ணிவைச்சா ஒருவேள நல்லா ஆகலாம் முன்னு யோசிச்சாக அவுக அம்மா

அதுமாதிரியே தேடிப்புடிச்சு ஒருபொண்ணக் கொண்டாந்தாக, அதுகொஞ்சம் படிச்சதுதான், அந்தபுள்ளகிட்ட வெவரத்தசொன்னக நீதான் பாத்துக் கனுன்னு, அந்த நேர்ம புடிச்சி ருந்ததால கலியாணம் நடந்துச்சு,

ஆனாலும் அவன் அவன மாத்திக்கல குடிக்கிறதக்கொறைக்கல பாவம் அந்தப்புள்ள என்னா பண்ணுறதுன்னு தெரியல இப்புடி வந்து மாட்டிக் கிட்டமேன்னு அழுதுபொலம்புச்சு இதுக்கு நடுவுல புள்ளதாச்சியாவும் ஆயிடுச்சு

அவுக வீட்டுல மொறப்படி பிரசவத்துக் குக்குக் கூட்டிட்டுப்போனாக, பிரசவ நாளும் நெருங்கிடுச்சு ஆனா இவன் கண்டுக்கிட்டமாதிரியில்ல அவன் பாட்டுக்குக்குகுடிச்சிட்டுக்கெடந்தான்

ஆம்பளைப்புள்ள பொறந்துச்சு இவனப்பாக்ககூப்புட்டாக இவன் போனா இவன் பொண்டாட்டி அழுத்துக்கிட்டு இருந்துச்சு. இவனுக்கு ஒண்ணும் புரியல போயி மகனப்பாத்தா அரண்டுபோனான் இப்புடி ஒருபுள்ளயா... ஒடம்பெல்லாம் செதில் செதிலா புண்ணு வந்தமாதிரி பாக்குறதுக்கே பயங்கரமா இருந்துச்சு

டாக்குட்டரு வந்து பாத்தாக பத்து லட்சத்துல ஒருகொழந்தைக்கி வார அபூர்வக்கோளாறு காஞ்சுபோன தோல்வியாதி இதுன்னு சொன்னாக

இவனுக்கே அழுக அழுகயா வந்துச்சு ஒடஞ்சிபோயிட்டான் . அவனோட பொண்டாட்டி பாவம் என்ன வானாலும் பெத்தபுள்ளயாச்சே விட்டுறமுடியுமா அழுதுக்கிட்டே தூக்கிப்பாலுகுடுத்தா

ஆனாலும் மனசு தாங்கல அழுதுக்கிட்டே இருந்தா. இவன் சோகம் அதிகமாயி நெறையாக்குடிச்சான் மூணுமாசம் கழிச்சி பொறந்தவீட்டுல இருந்து இவன் வீட்டுல கொண்டாந்து விட்டாக இவன் புள்ளய பாக்கவே வரமாட்டீன்னுட்டான்

அவனோடபொண்டாட்டி சண்ட போட்டா நீ இப்புடிக்குடிச்சிட்டு இருக்குறதுதான் புள்ளயப்பாதிச்சிடுச்சு. உன்னோடபழக்கம் தான் இந்தப்புள்ள இப்புடியானதுக்குக்குக் காரணம்ன்னு திட்டுனா, இவன் பயந்துட்டான். ஒருவேல அதுதான் இந்த பிரச்சனைக்கிக்காரணான்னு யோசனபண்ணுனான் தெரிஞ்ச டாக்ட்டர்கிட்ட போயி காமிச்சான் மகன

அவரும் ஆமா நீ குடிக்கிறதுதான் காரணம்ன்னு சொன்னாரு. விசயம் என்னான்னா அதுமாதிரிசொல்லச்சொல்லி ஏற்கனவே டாக்ட்டர்கிட்ட அவன் பொண்டாட்டிசொல்லிருந்தா.

ஒருநா ஒக்காந்து யோசிச்சி முடிவெடுத்தான் குடிக்கிறத விடுறதுன்னு ஆனா அவனால முடியல

இதுக்குள்ள மகனுக்கு நாலு வயசாச்சு பேசுற வயசுக்கு வந்து பேச ஆரம்பிச்சான் வெவரமும் அதிகமாப்போச்சு அவனே கேட்டான் நான் இப்புடியிருக்குறதுக்கு நீ குடிச்சதுதான் காரணமாமுல்ல ஏம்பா இப்புடிஎன்னப்பண்ணிட்டன்னு அழுதுக்கிட்டே கேட்டான்

இவனால தாங்க முடியல அப்பத்தெரிஞ்சவரு மூலமா குடிக்கிறதக்கொணப்படுத்துற ஆஸ்பத்திரில சேத்தாக அங்க இவனச்சரிபண்ணிட்டாக ஒருவழியாக் குடிக்கிறத நிறுத்திட்டான் அப்ப மகன் கிட்டப்பேசினான் அப்பா இனிமேக்குடிக்க மாட்டேன்டான்னு அவனுக்கும் சந்தோசம் பொண்டாட்டிக்கி சந்தோசம் மகன் அப்பனத்திருத்துனதுல

மகனப்பள்ளிக்கொடத்துல சேக்கலாமுன்னு முடிவெடுத்தாங்க அங்க பிரச்சன திரும்ப பயங்கரமா வந்துச்சு இவனப்பாத்து மத்தபுள்ளக பயப்ப்டுதுன்னு பள்ளிக்கொடத்துல சேக்கமாட்டேனுட்டாக

இவனப்பாத்தா மத்தபுள்ளக பயத்துல கத்துச்சுக அப்ப ஒரு டாக்குட்டரு தோல் சிகிச்சை யில பெரிய ஆளு அவரு பள்ளிக்கொடத்துல வந்து விளக்குனாரு இது தொத்துநோயிகெடையாது

அதுனால பயப்படத்தேவையில்லன்னு

பள்ளிக்குட நிர்வாகமும் ஒத்துக்கிச்சி ஆனா அவனுக்குத்தனி பெஞ்சு குடுத்து ஓரமா ஒக்காரவைச்சாக அவனுக்கு வெளையாடக்கூட பிள்ளக கெடைக்கல பயந்துச்சுக அதச்சொல்லி அழுதான்

இப்ப ரெண்டாவது ஒருகொழந்த பெத்துக்கலாம் மத்தபிள்ளகளை வுட கூடப்பொறந்த துன்னா சொல்லி புரியவைச்சிடலாம்ன்னு முடிவெடுத்து ரெண்டாவதா மாசமாச்சி அவன் பொண்டாட்டி . மூணாவது மாசம் செக்கப்புக்குப்போகும் போது அந்த தோல் டாக்குட்டரு பாத்தாரு. பாத்துட்டுத்தனியா கூப்புட்டாரு. ஒங்களுக்கு இருக்குற பிரச்சன போதாதா இன்னொரு பிரச்சனைய ஏன் வரவைக்கிறீங்கன்னாரு இவனுக்குப் புரியல

அவரு சொன்னாரு இந்தப்பிரச்சனை இப்ப வயத்துல இருக்குறகொழந்தைக்கும் வரும்ன்னாரு இவன் அதிர்ர்சில அழுக ஆரம்பிச்சிட்டான் என்ன சொல்றீகன்னான்

அவரு சொன்னாரு இது அப்பா ஒடம்புலயும் அம்மா ஒடம்புலயும் இந்த வியாதிக்கான வியசம் இருக்கும் ரெண்டுபேருமே இந்த பிரச்சன ஜீன்ல இருந்தாத்தான் இப்புடிக்கொழந்த பொறக்கும் ஒருத்தருக்கு மாத்திரமிருந்தா இது நடக்காது ஒங்க ரெண்டுபேருக்கும் இது இருக்குறதுனால

நீங்க எத்தனைகொழந்த பெத்துக் கிட்டாலும் இப்புடிக் கொறையோடதான் பொறக்கும்ன்னாரு. ரெண்டுபேருக்கும் அழுகவந்துடுச்சி. அப்ப அவசொன்னா நீங்க குடிச்சதுனாலதான் வருதுன்னு தப்பாப்புரிஞ்சிக்கிட்டேன் மன்னிச்சிருங்கன்னா அழுதுக்கிட்டே அதுக்கு அவன் சொன்னான் பரவாயில்ல இப்பநான் திருந்துனதுக்கு அதுதான் காரணம் அதுவும் நல்லதுக்குத்தான்னான்

அதுக்குள்ள டாக்குட்டரு ரூமுக்குள்ள கூப்புட்டாக ரெண்டுபேரையும் அப்ப அவுக சொன்னாக பொறக்கப்போற புள்ளையும் இதுமாதிரிதான் இருக்கும் எங்க தொழில் தருமத்தையும் மீறி நீங்க வேணாமுன்னு சொன்னா கலைச்சிடலாம்ன்னாக

இவுகளுக்கு ஒருமாதியாகிப்போச்சு வீட்டுல போயிபேசிட்டுச்சொல்றோமுன்னாக

வீட்டுல போனா ரெண்டுபேருக்கும் அழுகைய அடக்கமுடியல, அவன் சொன்னான் கலைச்சிடலாம் ஒருத்தனே பாவம் அவஸத்தப்படுறான் வேணாமுன்னு முடிவெடுத்தாக காலையில ஆசுபத்திரிக்கிப்போறதன்னு முடிவு

காலையில எந்திரிச்சா மகன் அழுதுக்கிட்டு இருந்தான் என்னடான்னு கேட்டாக அவன் சொன்னான் வயத்துல இருக்குற தம்பிய கொல்லப்போறீகலான்னு கேட்டான் அம்மா காரி அதிர்ச்சில ஆருடா சொன்னதுன்னா, அவன் சொன்னான் நான் ராத்திரி நீங்கபேசுனதக்கேட்டேன் ன்னான்

இவங்களுக்கு ஒண்ணும் புரியல, இவுக சொன்னாக நீயே எவ்வளவு கஸ்ட்டப்படுற
அதுவும் கஸ்ட்டப்படனுமா ஒன்னய மாதிரின்னாக . ஒருவேலை நான் ஒங்க வயத்துல இருக்குறப்பவே தெரிஞ்சிருந்தா என்னையும் கொன்னுருப்பீகளா இப்பக்கூட ஒங்களுக்குப் புடிக்கலன்னா என்னையும்கொன்னுடுங்கன்னான்அப்பச்சொன்னான் அப்ப என்னையும் கொன்னுருவீகலான்னு அழுதுக்கிட்டே கேட்டான் இவுகளால அழுகைய அடக்கமுடியல இல்லடா இல்லடான்னு அணைச்சிகிட்டா அம்மா.அவன் அழுதுக்கிட்டே சொன்னான் என்னயமாதிரி இருந்துடுப்போகட்டுமே என்கூட வெளையாடத்தான நீங்க பிள்ள வேணுமின்னீக இப்ப அதுவும் என்னயமாதிரி இருந்தா என்னையப் பாத்துப்பயப்படாம என்கூட வெளையாடும்ல என்னோட எப்பவும் கூட இருக்குமுல்ல ன்னு
அம்மாவால தாங்கமுடியல இவ்வளவு வெவரமாப்பேசுறவனுக்குப்போயி இப்புடிப்பிரச்சனையான்னு கண்ணுல கண்ணீர் ஊத்துச்சு அப்ப அப்பா சொன்னாரு . நீ சொன்னதுதான் சரி ஒனக்கு தம்பிப்பாப்பா வரும்டா நாங்க முடிவமாத்திக்கிட்டோம்ன்னு கண்ணீரோட சொன்னாரு எல்லாத்தையும் அணைச்சிக்கிட்டு அம்மாவும் ஆனந்தக்கண்ணீர் விட்டுச்சு அம்மா புள்ள எப்புடியிருந்தாலும் அம்மாதான.......



No comments:

Post a Comment