Sunday 11 October 2015

நீங்கள் ஏரிகள்
எல்லாவற்றையும்
வரைபடத்தில்
மறைத்துவிடுங்கள்
ஏதோ ஒரு நகரின் பெயரில்
குளங்க ளையெல்லாம்
குழிதோண்டிப்புதைத்துவிட்டு
குடியிருப்புகளைக் கட்டுங்கள்
கிணறுகளையெல்லாம்
குப்பைகளைப்போட்டு
குப்பைத்தொட்டியாக்கிவிடுங்கள்
மலையில் உள்ள

 மரங்களையெல்லாம்
வெட்டிவிட்டு 

தங்குமிடங்கள்கட்ட
தனியாருக்குத்

தாரை வார்த்திடுங்கள்
ஆறுகளை நாணல் பயிரிட்டு
மணல் மேடாக்கி

 மணல் குவாரி
ஏலம் எடுத்து 

விற்பனை செய்யுங்கள்
ஆகாயத்தாமரைக்கும்

 நீர்குடிக்கும்
தாவரங்களுக்கும் 
நீர் ஊற்றி காப்பாற்றுங்கள்
யாரும் தடுக்கமாட்டார்கள்
ரேசன் கார்டு

 ஒன்றுக்கு ஒருலிட்டர்
தண்ணீர்மட்டுமே என்ற
வரிசையில் 

அனைவரும் நிற்கும்போது
வரிசையில் இடமில்லாமல்
ஆடுமாடுகள் பறவைகள்
இறந்துகிடக்கும் விரைவில்
விரைவில் ஆகும் நம் நிலையை
முன் உரைத்தபடி.....

கொஞ்சநாளில்
தாகம் என்று தண்ணீர் கேட்க 
உயிரினம் எதுவும் இருக்காது

கேட்க ஆளில்லை என்னை
என்ற வரம் எனக்கு.....
ஒரே அடாவடி ஆரவாரம்
நினைத்ததை என்ன
விலைகொடுத்தேனும்
முடித்திடும் எகத்தாளம்
இறுமாப்பு கொக்கரிப்பு
யாராவதுகேட்டாலும்
திமிரான பதிலில்
பொசுக்கும் பலர்பார்வையில்
மது மாது மஜா என
போதையின் அனைத்து
மூலைமுடுக்கெல்லாம்
முகர்ந்து ருசித்த செறுக்கு
எல்லாம் இளமையும் 
பணமும் சேர்ந்துஇருந்த
வசந்தகாலம்
இன்று அனைத்தும் பிரிந்து
முதுமையின் பிடியில்
முக்கி முனகுகிறேன்
இப்போதும் என்னைக்
கேட்க ஆளில்லை ஒருவேளை
சாப்படுகொடுக்க என்ன உடம்புக்கு
என்று பரிவுடன் கேட்க
கேட்க ஆளில்லை என்பது 
இப்போது சாபம் எனக்கு.......

மாலைநேரம் மலர்கள்
பல கூந்தலில்சூடி
மன்னவன் உன் வருகைக்காக
மாதவம் செய்து
காத்திருக்கிறேன்மயக்கத்துடன்
மலர்களின் வாசம்என்னை
மதிமயங்கச்செய்கிறது
மயக்குன் உன் எண்ணம்
மனதெல்லாம் வாசமாக
நிறைந்துகிடக்கிறது 
மன்னவன் உன் விரல்பட்டு
பூக்கக்காத்திருக்கின்றன
என் தேகமொட்டுக்கள்
அக்கினி அலைகளை
ஆங்காங்கு பற்றவைத்து
கொழுந்துவிட்டெரியச்செய்து
பின் அணைத்து மகிழ்விப்பதில்
மன்னன்நீ
உன் விளையாட்டுகளுக்காக
ஏங்கிக்கிடக்கிறது
என் தேகப்பூங்காவனம்
படபடத்துசிலிர்த்து......
விரைந்து வருவாயா என்
உயிர்குடித்து உயிர்கொடுக்கும்
உயிரான மன்னவனே........
பிரிவதென்று முடிவெடுத்தால்
உதிரம் வழிவதுமேன் விழிகளில்
உதிருமென்று முடிவெடுத்தால்
அழுதிடுமேமலர்களும்
விழுவதென்றுஆகிவிட்டால்
பனிக்கட்டியும் உருகிடுமே
கொட்டுவதென்பதே விதியானால்
நொறுங்கிடுமே இலைகளும்
பெய்வதுதான் காலமென்றால்
அழுதிடுமேமழைமேகமும்
விழிகள் வீங்கிஅழும்போதும்
விரல்களுக்கு தயக்கமேனோ
வாய்விட்டுஅரற்றும் போதும்
வார்த்தைகள் வரமறுப்பதேனோ
நெஞ்சம் குலுங்கும்போதும்
கொஞ்சமும் தவிர்ப்பதுமேனோ
காரணம் சொல்லிவிடு இல்லை
கண்களைத்துடைத்துவிடு
வேறேதுவும் முடியவில்லையென்றால்
வெட்டியெனை கொன்றுவிடு
காணும் இடத்திலெல்லாம்
நிறைந்து கிடக்கும் உன் தேகம்
கண்களைமூடினாலும்
குறைவதில்லை அதன் தாக்கம்
காண இயலவில்லை என்பதே
கண்களின் ஏக்கம்
நினைவின் ஒவ்வொருதுளியிலும்
நீங்காது நிரவிக்கிடக்கிறது
என் தாகம் 
கண்டும் காணாமல் 
கண்ணாமூச்சிகாட்டுகிறது
கண்ணாளா உன்
காட்சிதரும் யாகம்
என் மனதைத்தட்டுகிறது
சந்தேகம் எனும் காகம்
பதில் சொல்லவருவாயா
பதிலாகவருவாயாஅல்லது
பதறவைத்துபார்ப்பாயா
கலங்கிடக்கும் குட்டையாய்
கண்ணாளானைதேடும்நெஞ்சம்.....

கீதையும் இசைபோதையும் 
பாரதக்காதையும் நல்பாதையும் 
மாதவனும் போதகனும்
கள்வனும் நிறைசெல்வனும் 
நியாயமும் அநியாயாயமும் 
உண்மையும் பொய்மையும் 
காப்பவனும் அழிப்பவனும்
தருபவனும் பெறுபவனும் 
ஆள்பவனும் ஆளப்படுபவனும் 
இன்பமும் துன்பமும் 
பசியும் உணவும்
வெளிச்சமும் இருளும்
போரும் சமாதானமும்
கூடுதலும் பிரிவும்
அறியாமையும் அறிவும்
வெப்பமும் குளிரும்
இனிப்பும் கசப்பும்
ஆணும் பெண்ணும்
இளமையும் முதுமையும்
யாதும் நீயே கண்ணா........
எங்கும் உன் ஒளிவண்ணம் கண்ணா

அகதியானபோதுகூட
அழவில்லை நீ
சகதியில் கிடந்தபோது
நான் புதைந்துபொனேன்
காலையில் குடித்தபால்
கடைவாயில் காயவில்லை
இடுப்பில் இருந்ததடம்
இன்னும் அழியவில்லை
பசிக்காகக் கடல் நீர்
குடித்தாயோ கடல்
தன் பசிக்கு 
உன் உயிர்குடித்ததோ
உன் எச்சில் ஈரமக்கியது
கடல் மண்ணை
ரணமாக்கி துடிக்கின்றன
காணும் கண்கள்....

கம்மாயில மிதிபாவக்கா
போட்டுருக்கேன்
ராத்திரிஅங்குனயே
போய்படுத்துக்கெடந்து
வெள்ளனா எந்திரிச்சு
பாவக்காயப்புடுங்கி
அதக்கம்மாத்தண்ணியில
கழுவி சாக்குலபோட்டு
தலைச்சுமையாதூக்கிட்டு
நடந்தா காலுவழுக்கும்
கழுத்துகெஞ்சும்
கீழேயும் பாத்துநடக்கனும்
பூச்சிபொட்டு கெடக்கும்
கரையேறிமார்கட்டுக்கு
நடந்தேபோய் 
எடைபோட்டுவித்துப்புட்டு
காசவாங்கி.தொண்டைக்கு
நாடாருகடையில ஒருவடையும்
காப்பித்தண்ணியும் குடிச்சுப்புட்டு
பொடிநடையாவீட்டுக்கு
போய்காசக்குடுத்தா
வட்டிக்காரன் வசூலுக்குவந்துநிப்பான்
ஒழைக்கிறதுல முக்காவாசி
அவந்தான் திங்குறான்
இந்தகையும் காலும்தான்
மிச்சம் நமக்கு
என்னத்த சொல்ல மக்கா

ரஸனையின் இதழ்கள்
அழகானவை அதுதான்
மலருக்கு மணம்தருவது
மலரே கவிதைதான்
மணமும் கவிதைதான்
நல் மனமும் கவிதைதான்
மெல்லத்தலையசைத்து
ரசிப்பதுமோர் கவிதைதான்
மேனிகுலுங்கசிரித்து
ரஸிப்பதுவும்கவிதைதான்
சொல்லிரசிப்பதும் கவிதைதான்
அள்ளி முகர்வதும்கவிதைதான்
கிள்ளி சுவைப்பதும் கவிதைதான்
மல்லி மலர்வதும் கவிதைதான்
தள்ளிநின்று ரஸிப்பதும் கவிதைதான்
தடவி உணர்வதும் கவிதைதான்
கண்மூடிரசிப்பதும் கவிதைதான்
கண்கள் விரியரசிப்பதும் கவிதைதான்
உள்ளத்தைக்
கொள்ளையடிப்பதும்கவிதைதான்
அதை சொல்லாமல் சொல்வதும்
கவிதைதான்,,,,,,,

இந்தபேரப்புள்ள
இடுப்பவிட்டு
எறங்கமாட்டேன்றான்
எப்பபாத்தாலும்
அப்பத்தாதூக்கு தூக்குனு
விடமாட்டான் 
இந்தநேரத்துல இவனுக்கு
சாக்கிலட்டுவேணுமாம்
கடக்காரு கடயமூடுட்டாரான்னு
தெரியல இடுப்பு வலிக்குது
வாலிப வயசா எனக்கு
5மைலுபோய் தண்ணி
கொண்ணாந்தஉடம்புதான் 
இப்ப முடியல
இவனோட அப்பன்
ஏம இடுப்பில
இருக்கமாட்டான் ஒடிட்டேதான்
இருப்பான் ஆனா இவன்
என்னவிடமாட்டான்
விட்டாநீபோய்ருவ ஊருக்குனு
சொல்லிட்டே ஏங்கூடத்தான்
இருப்பான் ஆனா நா
இங்கேயே இருக்கமுடியுமா
மத்த மகனுக வீட்டுக்கு
போகனும்ல மத்தபேரம்பேத்திக
தேடுவாகளே இவனுக்கு
நான் ஒரே அப்பத்தா
ஆனா எனக்கு அஞ்சாறு இருக்கே
ஆனா இவம்புள்ளைக்கு
அந்தபிரச்சனை இல்ல
ஏன்னா இவன் ஒரேமகந்தான்
இனிமே வாரபுள்ளகளுக்கு
சித்தி சித்தப்பா மாமா அத்தை
மாதிரி உறவெல்லாம் 
இருக்காதுபோலைருக்கு.....
என்னத்தச்சொல்ல ..........

தினம் கூடையில
காய்கறிபழமொத்தக்கடயில
சரக்கெடுத்து 
தெருத்தெருவாகொண்டுவோய்
விப்பேன் நாள்பூராம்
அலைஞ்சிவித்தா
நாப்பது அம்பது நிக்கும்
வெங்காயம் இல்லாட்டி
சீசன் ல கொய்யா மாம்பழம்
அப்புறம் ஆப்பிள் சாத்துக்குடி
இப்புடிஎதுநாச்சும் யாவாரம்
பண்ணுவேன் மழகிழபேஞ்சா
பொழப்பு சிரிச்சுப்போகும்
வயிறுகாஞ்சுபோகும்
நம்மல நாமதான்
பாத்துக்கணும்
இன்னிக்கியாவாரம் நல்லா
நடக்க மலயடிகருப்பு
நீதான் பாத்துக்கணும் சாமி
இல்லனா பட்டினிதான்
கெடக்கனும்நானு/

வாழ்க்கையத்தள்ள
வண்டியத்தள்ளித்தான் ஆகனும்
முடியலனாலும்
மூச்சுமுட்டினாலும்
மூச்சுஇருக்கனும்நா
கஸ்டப்பட்டுதான் ஆகனும்
விடியல்ல எந்திரிச்சு
இருட்டுறவரைக்கும்
அள்ளிகொண்டுபோய்
சேக்கனும்வெயிலுபாக்காம
மழைபேஞ்சா மொத்தமா
போய்டும் கரைஞ்சு
சுட்டுஎடுக்குறவரைக்கும்
திக்கு திக்குனு இருக்கும்
சுட்டுவந்தாத்தான் செங்கலு
அதுவரைக்கும் மண்ணுதான்
பாதுகாக்கனும் 
நாமநனைஞ்சாலும் அது
நனையவிடக்கூடாது.....
நாமகாஞ்சாலும்...வயிறுகாஞ்சாலும்
இந்தமண்ணுதான் பொழப்பு
இல்லன்னா நாமதான் மண்ணு......

காத்துக்கிடக்கிறேன்நான்
இரும்புத்தண்டவாளமாக
நீவரும் வழிகளில்
வெயில்மழைஎன்றுபாரமல்
உன்முகம் காணும்
ஆவலோடுவிழ்கள்பூத்து
தொலைவில் நீவரும்
ஓசைகேட்டுமெய்சிலிர்க்கிறேன்
உன்வருகையின்
அதிர்வுஎன்நாடிநரம்பெல்லாம்
பாயும் உணர்வில் லயித்தபடி
என்னை உன்னுள் ஐக்கியம்
செய்தபடி தவமாய்....

என்கிட்ட இருந்து
வயலப்பிடுங்கினாங்க
வீட்டப்பிடுங்கினாங்க
பாத்திரபண்டங்களைப்
பிடுங்குனாங்க
ஆட்டைப்பிடுங்குனாங்க
மாட்டைப்பிடுங்கினாங்க
கடன் கொடுத்தவங்க ஆனா
என்கிட்டயிருந்து 
பிடுங்கவேமுடியல
”பசியமட்டும்”

முன்னிரவுநேரம் 
தூரத்துமின்னல் ஒளி
படபடக்கும் இடியின் ஒலி
மெல்லியமழைவாசம்
லேசானகுளிர்காற்று
மேனியெங்கும் தழுவி
சொல்கிறது உன் வரவை......
என்னை ஆட்கொண்டபடி

சடசடத்துப்பெய்கிறது
சன்னல்வழியாக மழை
என்னைசாரலாகநனைத்தபடி
பட்டும் படாமலும்
காற்றின் வேகத்திற்கேற்ப
தழுவுகிறது சாரல் என்னை
ஒவ்வொருமுறை
தழுவும்போதுசிலிர்க்கவைத்து
சற்றுவிலகி
அடுத்ததழுவலுக்காக
என்னை ஏங்கவைத்தபடி///



அம்மாஓர் அதிசயம்
ஆயிரம்குழந்தைகள் அழுதாளும்
தன்குழந்தைகுரல் 
தனியேகேட்குமவளுக்கு
ஆழ்ந்த உறக்கத்திலும்
குழந்தயின் பசிக்கும்வேளை
எழுந்துபாலூட்டுவாள்
உடம்பில் சத்துஇல்லாமல்
போனாலும் குழந்தைவயிறு
காயபொறுக்கமாட்டாள்
குழந்தைக்குசேராதஎதையும்
தானும்சேர்க்கமாட்டாள்
தன் குழந்தையை 
யார்குறைசொன்னாலும்
எந்தவயதிலும் ஏற்கமாட்டாள்
தன்னைத்தியாகம்செய்துகூட
தன்குழந்தையைகாப்பாள்
தன்குழந்தைஎங்கிருந்தாலும்
நன்றாக இருக்கதினம்
கடவுளிடம் வேண்டுவாள்
தனக்கெனஎதுவும் வேண்டாமல்
அதனால்தான் அம்மா
கடவுளைவிட உயர்ந்தவள்

காலைவிடிஞ்சதுலைருந்து
களைஎடுத்துட்டு
வரும்போது
இருக்குற புல்ல
வெட்டிஎடுத்தா ந்தம்னா
எப்படா வருவான் இவன் நு
காத்துக்கெடக்குற
மாடுகளுக்கு தீவணமாபோகும்
நம்மவீட்டுலயே கஞ்சி
கெடயாது கழனிதண்ணில
என்னைருக்கப்போகுது
புல்லகில்லதிண்ணாத்தான்
ஆடுமாடுகளுக்குசத்து
அதுகளும் புள்ளைகள்தான
அதுக திண்ணும் 
நம்மபிள்ளைகளுக்கு
புல்லபோட முடியுமா
அதுகபாவம் பட்டினிதான்
பலநாளுஎன்னோடசேந்து.......

கதிரடிச்சதுக்கப்புரம்
களத்துமேட்டுல
வைக்கலபடப்பா
போட்டுவைப்போம்
மாட்டுக்குதீவனம் ஆகும்
கூரையில் மேய்வோம்
யாவாரிகவந்து பல
வேலைகளுக்கு
வாங்கிட்டுபோவாக...
ஏன்னாதாள் நீளமாஇருக்கும்
இப்போவருற வைக்கல்
மிசுனைவைச்சு அறுக்குராக
அதுநால குட்டயாஇருக்கு
வெலப்போகமாட்டேங்குது
மருந்துஅடிச்சதால
மாடும் திங்கமாட்டேங்குது
மாட்டத்தான் அடிமாட்டு
வெலைக்கிகேக்குறாங்களே
வைக்கலயும் 
குப்பைரேட்டுக்குத்தான்
கேக்குறாங்க.......என்னத்தச்சொல்ல...

காலங்காத்தாலநாவிதர
வரச்சொல்லி 
கருப்பட்டிக்காப்பித்தண்ணிகுடுத்து
உபசரிச்சு 
மனைப்பலகையப்போட்டு
குடும்பத்துலஉள்ள
அத்தனைஆம்பளகளும்
குஞ்சுகுளுவாணிஉள்பட
அவருக்கு மரியாதைகுடுத்து
சம்மனம்போட்டு ஒக்காந்து
மத்தியானம் வர எல்லோரும்
முடிவெட்டி சவரம் பண்ணுவோம்
அக்குள் முடி எடுக்கும்போது
கூச்சமாஇருக்கும்
சிலநேரம் சின்னப்புள்ளைங்க
மிசினைபாத்து 
அழுக ஆரம்பிச்சிடும்
புடிங்கிட்டுஓடப்பாக்கும்
அதுகல அமுக்கிப்புடிச்சி
முடிவெட்டும்ப்போது
காயமாயிடும் அப்ப
சத்தமாகத்தி ஊரக்கூட்டிடும்
எல்லாம் வேடிக்கைபாத்து
சிரிச்சிகிண்டல் பண்ணுவாங்க
அச்சுவெல்லம்தந்து 
சமாதானபடுத்துவாங்க
மதியம் அவருக்கும்சேத்து
சாப்பாடுபோட்டு அனுப்புவாக
கூலியெல்லாம் தனியாகிடையாது
களத்துமெட்டுல வருசக்கூலியா
அஞ்சுமரக்கா நெல்லுதான்....
கட்டையிலபோறவரைக்கும்
அவர்கத்திதான் மேலபடும்......
இப்போபாத்தாலும் 
கிண்டல்பண்ணுவாரு
சந்தானமய்யா....அவர் புள்ளைக
ட்வுன்ல கடபோட்டாக...
அங்கெல்லாம் காசுகுடுத்தாத்தான்
வேலையாகும்.....அவுகளும்
முன்னேறனுமுல்ல........

ஒவ்வொருமுறையும்
உளறுகிறேன் வாய்தவறி
உன்பெயரை
சிலநேரங்களில்
மனம்தானாளுகிறது
சொற்களை......
மூளையை 
மூலையில்தள்ளிவிட்டு

நான் மழைமேகம் 
உன்மீதன்பைப்பொழிய
உந்தன்அனுமதி
தேவையில்லை
நானுன் சுவாசக்காற்று
உன்னுள்புகுந்துவர 
எனக்குத்தடையில்லை
நான்நீராக உன்னுள்
உறைந்துகிடக்கிறேன்
ஒவ்வொருஅணுவிலும்
நான் வெப்பம்
உனதுயிரைஉறையாது
பார்த்துக்கொள்கிறேன்
எனக்குத்தெரியும்
உன்மெளனம் சம்மதமென்று
அதனால்தான் உன்னுளிருக்கிறேன்
உன் உயிராய்.......என்றும்.....

பொங்கலுக்கு எங்க ஊர்ல
வெளையாட்டுப்போட்டி
நடக்கும்..எளவட்டங்க
நடத்துவாக....
சின்னப்புள்ளைகளுக்கு
ஒட்டப்பந்தயம்
சாக்குஓட்டமெல்லாம்
நடத்துவாக
அவுக அவுக வீட்டுல
இருந்துசாக்குக்கொண்டாந்துறனும்
அதுக்குள்ள எறங்கி சாக்க
தூக்கிபுடிச்சிகிட்டுஓடனும்
அததது தடுக்கிவுழும்
குதிச்சுகுதிச்சுபோனா
நல்லாருக்கும்
எல்லாரும் சுத்திநின்னு
கைதட்டுவாக
அதுலதான்சீனிக்கு
பல்லுஒடஞ்சது.......
எட்டுதையல்போட்டங்க...
இன்னம் தழும்பிருக்கு.....

கடைக்குப்போறதே
பெரியவிசயம் அதுல
இவனைத்தூக்கிட்டுப்
போகனுமாம் கைகளைத்
தூக்கி இக்கு இக்கு
நு அடம்புடிக்கிறான்
இந்ததம்பிபயல்
அம்மாவசதியா
என்கிட்டதள்ளிவிடுகிறாள்
இவன் சுய்யா புய்யா
ங்கு ஞாங் நு ஏதோ
வாயில் எச்சல் ஒழுகபேசி
என் சட்டய நனைக்கிறான்
கடையிலகண்டதப்பாத்து
கைநீட்டுவான் கடைக்காரு
இவன் வாயில் சர்கரைதடவி
அனுப்புவாரு இவனும்
சப்புகொட்டுவான்
அதுக்குத்தான் வரறது
அடம்புடிச்சு........

காணும் விழிகருப்பு
மழைபொழியும்
கார்மேகம் கருப்பு
கும்பிடும்சாமிகருப்பு
குழல்கருப்பு
சுவைபுளிகருப்பு
இமைகருப்பு
கவிதைஎழுதும்
மைகருப்புகானும்
கனவின் நிறம்கருப்பு
நீஎனைமுழுதுமாக
நினைக்கும் இரவுகருப்பு
நான் குடியிருக்குமுன்
இதயமும் இருள்கருப்பு
என் உயிரே நீமட்டுமா...
பள்ளிமுடிந்து வீடுதிரும்பியதும்
பசிவயிற்றைக்கிள்ளும் 
அடுக்களையில் தேடினால்
அத்தனைபாத்திரமும் 
கழுவி கவிழ்த்தபடி 
அம்மாஉனிடம் நான் சொன்ன 
அடுத்தநொடியில் 
டப்பாக்கள் பல குடைந்து 
கொஞ்சம் ரவைகண்டுபிடித்து
எண்ணைஇல்லாததால் 
வெறும் கடுகு வெடிக்கவைத்து
பட்டமிளகாரெண்டுபோட்டு 
காய்ந்தகறிவேப்பிலை 
பிச்சிபோட்டு 
தண்ணீர்கொதிக்கவைத்து 
லேசா உப்பிட்டுரவைபோட்டு
சரட்டுசரட்டுன்னு கிண்டும்ப்போதே 
வாசம் ஆளைதூக்கி 
நாமுழுதும் சுரந்துவிடும் 
பாசமுடன் தட்டில் 
நீ வைக்கும்போதே 
என் உயிர் லயித்துவிடும் 
வயிறும் நிறைந்துவிடும்
உன் மனம்போலவே..

ஆயிரம் தடவை 
காபி குடித்தாலும்
அம்மா உன் கைமணம், 
யாருக்கும்வராது 
பாலும் குறைவுதான் 
தண்ணீரதிகம்தான் 
ஃபில்ட்டர்கூட இல்லைதான் 
மட்டமான விலைகுறைந்த 
காபிப்பொடிதான் 
சீனிகூடை இல்லைதான் 
கருப்பட்டிக்காபிதான் ஆனால் 
என்னமாயம் செய்வாயோ 
ஒரு மடக்கு நா தாண்டி
தொண்டையில்
இறங்கும்போதே
நெஞ்சம் தொட்டு 
நெகிழவைத்துவிடும்
இரண்டுவேளைபசிதாங்கும்......

Saturday 10 October 2015


    என் உடல்
    எரித்துக்களிக்கும்
    என்னுயிர் நீ.....

    வெட்கத்தை
    வீதியில்கொட்டுகிறாய்
    விரல்பட்டதும்....

    உம்மாகொடுக்கிறாய்
    சும்மா
    வெம்மாபடர்கிறது
    இதழ்களில்

    எட்டுமுறை இரவு
    வணக்கம் சொல்கிறாய்
    அதன்பின் எப்படியடா
    எனக்கு உறக்கம்.....

    தொட்டாலும் எரிகிறது தொடா
    விட்டாலும் எரிகிறது
    என்ன வித்தையாடா இது

    முகநூலில்
    அனுப்பியிருக்கிறேன்
    முத்தங்களை
    பகிர்ந்துவிடாதே
    பத்திரமாகதிருப்பிக்கொடு

    உன்பெயர் நிலவா
    இரவில்மட்டுமே
    இம்சைசெய்கிறாய்




     · 
    விரல்நுனியில்
    விதைத்துவைத்திருக்கிறாய்
    வித்தைகளை
    வருடியேவிதைக்கிறாய்காதல்
    விதைகளை

    காண ஆவல்கொண்டழைத்து
    வந்தவுடன் 
    ஏன்மூடிக்கொள்கிறாய்
    இருவிழகளை

    உன்னிடம்தொலைத்துவிட்டு
    எங்கேபோய்தேடுவேன்
    என் இதயத்தை......





     
    அனஸ்தீசியாஇல்லாமலே
    மயக்கம் வந்ததுமருத்துவருக்கு
    வருமானவரிச்சோதனை
    வாகனத்தைப்பார்த்ததும்.......